வெள்ளி, 12 ஏப்ரல், 2013

ஹியுகோ சாவேஸ் 1954-2013: அமெரிக்காவை மண்டியிட வைத்த வெனிசுலாவின் வீரப்புதல்வன்!

வெனிசுலாவின் அதிபர் ஹியுகோ சாவேஸ் மார்ச் 5-ஆம் தேதியன்று மறைந்தார். அவருக்கு வயது 58. “யோ ஸா சாவேஸ்” (நானே சாவேஸ்) என்று கண்களில் நீர் வழிய முழங்கியபடியே இருபது இலட்சம் மக்கள் தங்களுடைய தேசத்தின் வீரப்புதல்வனது உடலை ஏந்திச் சென்றனர். “வாழ்வதும் மரிப்பதும் வேறுவேறல்ல. வாழ்தலின் மரித்தல் சிறந்ததாகவும் இருக்கலாம் – வாழும் காலத்தில் செயவேண்டியதை ஒருவன் செய்திருந்தால்” என்று கூறினான் கியூபாவின் மறைந்த விடுதலைப் போராளியும் கவிஞனுமான ஜோஸ் மார்ட்டி. செய்ய வேண்டியதைச் செய்தவர்தான் சாவேஸ் என்ற போதிலும், அரியதொரு தலைவனைத் திடீரென்று இழந்த அதிர்ச்சியில் தவிக்கின்றனர் வெனிசுலா மக்கள்.


“அவர் மீது புற்றுநோய் ஏவப்பட்டிருக்கிறது என்றும், அந்தச் சதியை விரைவில் கண்டுபிடிப்போம்” என்றும் கூறியிருக்கிறார் கூறுகிறார், சாவேஸிற்குப் பின் பொறுப்பேற்றிருக்கும் நிக்கோலஸ் மாதுரோ. “விரைவிலேயே இந்த மர்மம் வெளியே வரும்” என்கிறார் பொலிவிய அதிபர் இவா மொரேல்ஸ். தென் அமெரிக்க கண்டத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை எதிர்த்து நிற்கும் தலைவர்கள் 6பேர் அடுத்தடுத்து புற்றுநோய்க்கு ஆட்பட்டிருக்கின்றனர். உணவு, பரிசுப் பொருட்கள், உள்ளாடைகள் போன்றவற்றை இரகசியமாக கதிரியக்கத்துக்கு ஆளாக்குவதன் மூலம், தமது அரசியல் எதிரிகளைக் கொலை செய்வதாக சி.ஐ.ஏ – வைப் பலரும் குற்றம் சாட்டுகின்றனர். பிடல் காஸ்டிரோவைக் கொல்வதற்குப் பல வழிகளில் முயன்று தோற்ற இழிபுகழ் பெற்றதுதான் சி.ஐ.ஏ. என்பதால் இந்தக் குற்றச்சாட்டு அலட்சியப்படுத்தக் கூடியது அல்ல.

சாவேஸின் மீது கொலைவெறி கொள்வதற்கான எல்லா முகாந்திரங்களும் அமெரிக்காவுக்கு இருந்தன. அமெரிக்க மேலாதிக்க எதிர்ப்பின் வலிமையான குறியீடாக சாவேஸ் இருந்தார். 2001-இல் இராக்கிற்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதித்து, சதாமுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று உலக நாடுகள் அனைத்தையும் அமெரிக்கா மிரட்டி வைத்திருந்தபோது, சாவேஸ் இராக் சென்றார். புஷ் கண்டனம் தெரிவித்தபோது, “வெனிசுலா இறையாண்மை கொண்ட ஒரு நாடு என்பதை புஷ்ஷுக்கு நினைவுபடுத்துகிறேன்” என்று அலட்சியமாக பதிலளித்தார். ஆப்கான், இராக் ஆக்கிரமிப்புகளை வெளிப்படையாக எதிர்த்துக் குரல் கொடுத்தார். 2008-இல் காசாவின் மீது இசுரேல் படையெடுத்த மறுகணமே, தூதரக உறவைத் துண்டித்துக் கொண்டார்.

தமது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய அதிபர் ஹியுகோ சாவேஸின் மரணச் செய்தியைக் கேள்வியுற்றுக் கதறியழும் வெனிசுலா மக்கள்.

2006-ஆம் ஆண்டு ஐ.நா.-வில் உரையாற்றிய சாவேஸ், “நேற்று சாத்தான் இங்கே வந்திருந்தது. இதே இடத்தில், இதோ நான் நிற்கிறேனே இதே இடத்தில் நின்றிருந்தது. கந்தக நெடிகூட இன்னும் போகவில்லை” என்று ஐ.நா.-வில் முந்தைய நாள் உரையாற்றிச் சென்றிருந்த போர்வெறியன் ஜார்ஜ் புஷ்ஷை எள்ளி நகையாடினார். அது அவை நாகரிகத்தில் பொருந்திய ராஜதந்திர மொழியன்று. ஆனால், அமெரிக்காவின் நடத்தைக்குப் பொருந்திய மொழி. ஆகவேதான் சங்கடத்தில் நெளிந்தாலும் அவையோரால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

1954-இல் மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்து பிழைப்புக்காக இராணுவத்தில் சேர்ந்தவர் சாவேஸ். இராணுவத்தில் சேர்ந்தவுடன், செங்கொடி இயக்கம் என்றழைக்கப்பட்ட மாவோயிஸ்டு கொரில்லாக்களை ஒடுக்குவதற்கான படைப்பிரிவுக்குத்தான் அனுப்பப்பட்டார். ஏழைகளுக்காகப் போரிட்ட மாவோயிஸ்டுகள் மீது அரசு ஏவிய சித்திரவதைகளும் படுகொலைகளும் அவரைச் சிந்திக்கத் தூண்டின. 1989-இல் சர்வதேச நாணய நிதியத்தின் ஆணைக்கேற்ப வெனிசுலாவில் அதிரடியாக அமல்படுத்தப்பட்ட மானியவெட்டுகள் மற்றும் தனியார்மய நடவடிக்கைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மக்கள் போராட்டம் ஒடுக்கப்பட்டு, நாடு முழுவதும் 3000 பேர் கொல்லப்பட்டனர்.


1973-இல் சிலியில் நிகழ்ந்த ஆட்சிக்கவிழ்ப்பு, அலண்டே கொலை, இலத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்திலும் அமெரிக்காவால் திணிக்கப்பட்ட இராணுவ சர்வாதிகார ஆட்சிகள் என்ற பின்புலத்தில் தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும், அமெரிக்க எதிர்ப்பும் சோசலிச நாட்டமும் கொண்ட பலவிதமான ஆயுதக் குழுக்கள் தோன்றியிருந்தன. அத்தகைய குழுவொன்றை இராணுவத்திற்குள் சாவேஸும் உருவாக்கியிருந்தார். 1992-இல் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பை நடத்த முயன்று தோற்றார். “தோழர்களே, துரதிருஷ்டவசமாக எங்கள் இலட்சியத்தில் வெற்றி பெற இயலவில்லை – இப்போதைக்கு” என்று தொலைக்காட்சியில் பேசினார் சாவேஸ். “இப்போதைக்கு” என்ற அந்த ஒரு சொல் மக்கள் நினைவில் பதிந்திருந்தது. சிறைத்தண்டனை முடிந்து வெளியே வந்த பின்னர், 1998-ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட சாவேஸ் வெற்றி பெற்றார்.

வெனிசுலாவின் எண்ணெய் வளம் முழுவதையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்காவின் எக்சான் மொபில் உள்ளிட்ட நிறுவனங்கள் தம் இலாபத்தில் ஒரு விழுக்காட்டை மட்டுமே ராயல்டியாக கொடுத்து வந்ததை 13 சதவீதமாக உயர்த்திச் சட்டமியற்றியவுடன், சாவேஸுக்கு எதிரான இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை அமெரிக்கா அரங்கேற்றியது. ஆனால், உலகம் முழுவதும் பல நூறு ஆட்சிக்கவிழ்ப்புகளை நடத்திய அனுபவம் கொண்ட அமெரிக்கா, வெனிசுலாவில் மண்ணைக் கவ்வியது. பல்லாயிரக்கணக்கான மக்கள், குறிப்பாகப் பெண்கள் இராணுவத்தை முற்றுகையிட்டுப் பணிய வைத்தனர். 28 மணி நேரத்தில் ஆட்சிக்கவிழ்ப்பு தோற்றது. சாவேஸ் மீண்டும் பதவியில் அமர்ந்தார். தமக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களில் வேலை நிறுத்தத்தை அமெரிக்க முதலாளிகளே தூண்டிவிட்டனர். பொருளாதாரம் நிலைகுலைந்தது. உள்நாட்டிலேயே மக்களுக்கு எரிபொருள் இல்லை. “முதலாளிகளிடம் பணியாதே சாவேஸ். நாங்கள் தாக்குப்பிடிக்கிறோம்” என்று கூறி அத்தனை துன்பங்களையும் சகித்துக் கொண்டார்கள் மக்கள்.


நாட்டின் எண்ணெய் வளம் தந்த வருவாயை மக்கள் நலத்துக்குப் பயன்படுத்தி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியதுதான் சாவேஸின் வெற்றிக்கு காரணம். 2005-இலேயே நூறு விழுக்காடு கல்வியறிவு சாதிக்கப்பட்டுவிட்டது. மக்களுக்கு உணவு உத்திரவாதம் செயப்பட்டிருக்கிறது. சுமார் 3 இலட்சம் பேருக்கு நிலம் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான கூட்டுறவுக் கழகங்கள் எல்லாத் துறைகளிலும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கியூபாவிலிருந்து சுமார் 25,000 மருத்துவர்கள் பணியிலமர்த்தப்பட்டு மக்களுக்கு தரமான மருத்துவம் இலவசமாக வழங்கப்படுகிறது. முதல் வகுப்பு முதல் பல்கலைக் கழகம் வரையில் கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது. வீடற்றவர்களுக்கு 5 இலட்சம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. வெனிசுலாவில் வீடற்றவர்களே இல்லை என்று கூறும் விதத்தில், அடுத்த 6 ஆண்டுகளில் மேலும் 20 இலட்சம் வீடுகள் கட்டப்படுகின்றன. மற்ற உற்பத்தி சார்ந்த உழைப்புகளைப் போலவே பெண்களின் குடும்ப உழைப்புக்கும் ஊதியம் வழங்கப்படவேண்டும் என்று கூறி, குடும்ப உழைப்பில் ஈடுபடும் பெண்களுக்கு அரசு ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது.

ஏழை, எளிய உழைக்கும் மக்கள் மீது இயல்பிலேயே அவரிடம் ததும்பிய நேசத்தையும், உண்மையான அக்கறையையும் அவரது எதிரிகள்கூட மறுக்க முடிந்ததில்லை. சாவேஸ் மக்களுடன் நேருக்குநேர் உரையாடி, அவர்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் “ஹலோ பிரசிடென்ட்” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி இதற்கு சான்றாக அமைந்தது.

கல்வி, மருத்துவம் போன்றவற்றை மக்களின் அடிப்படை உரிமைகளாக சாவேஸ் மாற்றியதை எதிர்க்கவும் முடியாமல், இத்துறைகளிலிருந்து தனியார் முதலாளிகள் விரட்டப்பட்டதை ஏற்கவும் முடியாமல் தவித்தனர் அமெரிக்க சார்பு முதலாளிகள், “மாதம் 25,000 ரூபாய் (450 டாலர்) தருகிறோம். நீங்கள் விரும்பிய வண்ணம் தரமான சேவையை விலை கொடுத்து வாங்கிக்கொள்ளலாம்” என்று ‘உங்கள் பணம் உங்களை கையில்‘ திட்டத்தைப் போலவே தனியார்மயத்தின் தந்திரத்தை கடைவிரித்துப் பார்த்தனர். மக்கள் மசியவில்லை.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு ஏழை நாடுகளில் மருத்துவமும், பொது சுகாதாரமும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு வரும் வேளையில் சாவேஸ் அச்சேவைகளைத் தேசியமயமாக்கினார்.

சாவேஸின் திட்டங்கள் வெனிசுலாவின் கஜானாவைக் காலியாக்கிவிடும் என்றும் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் முதலாளித்துவ ஊடகங்கள் கடந்த பத்தாண்டுகளாகக் கூக்குரலிட்டுப் பார்த்தன. வெனிசுலாவின் பொருளாதாரம் கடந்த பத்து ஆண்டுகளில் சராசரியாக 5.8 % வளர்ச்சியைக் கண்டது. மானியவெட்டு, மக்கள் மீது வரிவிதிப்பை அதிகப்படுத்துவது, தனியார்மயம் போன்ற வழிமுறைகள் மூலம்தான் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியும் என்ற சர்வதேச நிதி நிறுவனங்களின் தீர்வை சாவேஸ் பொய்ப்பித்தார். இதன் காரணமாக வெனிசுலாவின் முன்னுதாரணத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற குரல்கள் நெருக்கடியில் சிக்கியிருக்கும் ஐரோப்பிய நாடுகளில் எழத்தொடங்கின.

எண்ணெய், மின்சாரம், தொலைபேசி, சிமென்டு உற்பத்தி உள்ளிட்ட கேந்திரத் தொழில்துறைகளை பொதுச்சொத்தாக்குவது, மற்ற தென் அமெரிக்க நாடுகள் மற்றும் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுடனான வணிகத்துக்கு முதன்மை முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் வணிகத்துக்கு அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களைச் சார்ந்திருப்பதிலிருந்து விடுவிப்பது, தென் அமெரிக்காவைத் தனது சுதந்திர வர்த்தக வலையத்துக்குள் கொண்டு வர முயன்ற அமெரிக்காவின் சதியை முறியடித்து, தென் அமெரிக்கக் கண்டத்தின் நாடுகளுக்கான தனி வர்த்தக வலையத்தை உருவாக்கியது, உலக வங்கிக்குப் போட்டியாக தென் அமெரிக்க நாடுகளுக்கான ஒரு பொது வங்கியை உருவாக்கியது, தேசிய எல்லைகளைக் கடந்து தென் அமெரிக்கக் கண்டம் என்ற முறையில் ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு எதிராக நாடுகளை ஒன்றுபடுத்தியது, வணிகம்-இலாபம் என்ற முதலாளித்துவ அளவுகோல்களை நிராகரித்து வெனிசுலாவின் எண்ணெய், எரிவாயுவை கியூபாவுக்கும் பிற தென் அமெரிக்க நாடுகளுக்கும் மலிவு விலையில் வழங்கியது  போன்றவையெல்லாம் மிகவும் குறுகிய காலத்தில் சாவேஸ் நிகழ்த்திய சாதனைகள்.

அமெரிக்க ஆதரவுடன் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்து வெனிசுலா மக்கள் கார்கஸ் நகரில் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலம் (இடது); வெனிசுலா இராணுவத்தால் கைது செய்யப்பட்டிருந்த சாவேஸ், மக்களின் போராட்டத்தையடுத்து விடுதலை செய்யப்படுகிறார் (கோப்புப் படம்).

இவையனைத்தும் வெனிசுலாவின் முதலாளித்துவ அரசமைப்புக்கு உட்பட்டு, முதலாளித்துவக் கட்சிகளையும், பெரும் தனியார் முதலாளிகளையும், அவர்களால் அவர்களுக்காக உருவாக்கப்பட்ட அரசு எந்திரத்தையும், 95% அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்களையும் வைத்துக்கொண்டே செயப்பட்ட சீர்திருத்தங்கள். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் இவர்கள் தடைக்கற்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

மென்மேலும் மக்களிடம் செல்வதன் மூலமும், தங்களுடைய கோரிக்கைக்கான போராட்டத்தில் அவர்களையும் ஈடுபடுத்துவதன் மூலமும் சாவேஸ் அவற்றை எதிர்கொண்டிருக்கிறார். முதலாளித்துவத்தைக் கட்டுப்படுத்துகின்ற, அதிகாரவர்க்கத்தின் அதிகாரங்களைக் குறைத்து மக்களின் அதிகாரத்தை அதிகப்படுத்துகின்ற சட்டங்கள், திட்டங்களைக் கொண்டுவரும்போது, அவை குறித்துத் தேசம் தழுவிய வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுப்பது என்ற முறையின் மூலம், எதிரிகளை அரசியல்ரீதியில் பலமிழக்கச் செய்திருக்கிறார்.

தேர்ந்தெடுத்தவர்களைத் திருப்பி அழைக்கும் உரிமை என்பதை வெனிசுலாவின் அரசியல் சட்டத்தில் சாவேஸ்தான் அறிமுகப்படுத்தினார். சாவேஸ் ஒரு சர்வாதிகாரி என்ற அவதூறு பிரச்சாரத்தில் தொடங்கி ஆட்சிக்கவிழ்ப்பு வரையில் அனைத்தையும் முயன்று பார்த்த அமெரிக்க அடிவருடிகள், திருப்பி அழைக்கும் உரிமையையும் பயன்படுத்திப் பார்த்தனர். அதிலும் தோற்றனர்.

சாவேஸ் தன்னை ஒரு சோசலிஸ்டு என்றும் கிறித்தவர் என்றுமே சொல்லிக் கொண்டார். அவருடைய கட்சி பல்வேறு விதமான குட்டி முதலாளித்துவ, தேசியவாத, சோசலிச சக்திகளின் கூட்டணியாகவே இருந்தது. 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வெனிசுலாவின் விடுதலைப் போராளியான சைமன் டி பொலிவாரையே தனது வழிகாட்டியாக அவர் அறிவித்துக் கொண்டிருந்தார். ஏகாதிபத்திய எதிர்ப்பு, தென் அமெரிக்க ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியவை இணைந்த, கம்யூனிசத்தின்பால் பெருமதிப்பு கொண்ட ஒரு கண்ணோட்டம் சாவேஸை வழிநடத்தியது. தான் படைக்க விரும்புவது 21-ஆம் நூற்றாண்டின் சோசலிசம் என்று அவர் கூறிக்கொண்டபோதும், அதனை அவர் விளக்கவுமில்லை. ரசிய – சீன சோசலிசங்களுக்கு எதிராக நிறுத்தவுமில்லை.

“சாவேஸ் ஒரு புரட்சிகரமான தேசியவாதி. அவருடைய ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியத்தின் புரட்சிகரமான தன்மை அவரை சோசலிசத்தை நோக்கித் தள்ளிக்கொண்டே இருந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக, தேசிய எல்லை கடந்து தென் அமெரிக்க கண்டத்தை ஒற்றுமைப்படுத்த முயன்ற பொலிவார், ஜோஸ் மார்டி ஆகியோர் விதைத்த மரபு சாவேஸின் பின்புலமாக அமைந்தது” என்று மதிப்பிடுகிறார் அஜாஸ் அகமது.

தனது கொல்லைப்புற சோதனைச்சாலையாக தென் அமெரிக்க நாடுகளைப் பயன்படுத்தி வரும் அமெரிக்கா, 1970-களில் தனது கைப்பாவை ஆட்சிகளைப் பல நாடுகளில் நிறுவியதுடன், 1980-களிலேயே தனியார்மய தாராளமயக் கொள்கைகளை அந்த நாடுகளில் சோதிக்கத் தொடங்கியது. இதன் விளைவாக, 1980-களின் இறுதியில், ஆசிய நாடுகளில் புதிய தாராளவாதக் கொள்கை தீவிரமாக கடைவிரிக்கப்பட்ட காலத்தில், அங்கே “ஏகாதிபத்தியங்களின் கடையை மூடுவதற்கான” மக்கள் கலகங்கள் வெடிக்கத் தொடங்கி விட்டன.

இந்தப் பின்புலம் வலிமையானதொரு கம்யூனிஸ்டு கட்சியை அதிகாரத்துக்குக் கொண்டுவரும் அளவுக்கு மக்களைப் புரட்சிகரமான மாற்றத்துக்கு உள்ளாக்கவில்லை என்ற போதிலும், சாவேஸ் என்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆளுமையைத் தோற்றுவித்திருக்கிறது. “நானே சாவேஸ்” என்ற கதறியபடியே அவரது உடலைப் பின்தொடர்ந்து செல்லும் வெனிசுலாவின் உழைக்கும் மக்கள், சாவேஸ் தங்களைக் காலத்தால் முந்திக் கொண்டுவிட்டதைத் தம் கண்ணீரால் உணர்த்துகிறார்கள்.

அமெரிக்காவில் இருக்கும் வெனிசுலா அரசின் வழக்குரைஞர், சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்கிறார். வெனிசுலாவில் பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்றிருந்த சாவேஸ், நிகழ்ச்சி முடிந்த பின் மேடையேறி, ஒரு சிறுமியிடம்

“நீ அணிந்திருப்பது என்ன உடை கண்ணு?” என்று கேட்க, நான் ஒரு மாஜிக் நிபுணர்” என்று பதிலளித்தாள் அந்தச் சிறுமி.
“அய்யோ, அப்படியானால் என்னை காணாமல் போக வைத்து விடுவாயா?” என்றாராம் சாவேஸ்.
“இல்லை. உங்களைப் போலவே பல பேரை உருவாக்கிக் காட்டுவேன்” என்றாளாம் அந்தச் சிறுமி.

அந்தச் சிறுமி சொன்னதைத்தான் வெனிசுலா மக்கள் எதிரொலிக்கிறார்களோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக